புதிய காளமேகத்தின் பொறிப்பேழை

toolbar powered by Conduit
உடனே பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

இணையத்தில் பணம் சம்பாதிக்க....

Thursday, December 4, 2008

மூஞ்சிப் புத்தக மோகம்!

மூஞ்சியே தெரியாதவரோடெல்லாம்
மூச்சுமுட்டப் பேசவைக்கிறது
மூஞ்சிப்புத்தகம் - வெள்ளையன் மொழியில்
பேஸ்புக்.....

பொன்னான நேரமெல்லாம்
போகிறதே மண்ணாய்....
மூஞ்சிப் புத்தகத்தின் முகத்தெழிலில்
முகங்குனிந்த பேதைபோல - எம்மவரெல்லாம்
அடிமைப்பட்டு காலங்களி(ழி)க்கிறார்கள்....

இன்னும் இன்னும் கோடிமாக்களும்
வேலைவெட்டியின்றி - மோகத்தின்
பிடிப்பால் மூஞ்சிப்புத்தகத்தின் காலடியில்
தவழ்ந்து திளைக்கின்றனர்.....

தொடர்பு என்பது தேவைதான்...
தொடர்பெனும் இழையால் பின்னப்பட்ட 
வலை தானே வாழ்க்கை...?
ஆனால் தொடர்பே வாழ்க்கையானால்???

கேள்விகள் எழுகிறது என்னுள்தான்....
மூஞ்சிப் புத்தகளத்தில் நான் செலவழித்த
நேரத்தை....
பாடப்புத்தகத்தில் செலவழித்திருந்தால்....

ம்..ம்...
காலங்கடந்த ஞானம்......
கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்....

Monday, November 17, 2008

திரு.போலி!

அரிசிக் கடை முதல் அரசியற்களம் வரை
பஞ்சமேயில்லை போலிகளுக்கு - எம் தேசமிதில்!
புழுப்பிடித்த அரிசியும் புழுத்துப்போன அரசியலும்
அலுத்துப்போய்விட்டது நம்மவருக்கு....

அரிஸ்டோட்டிலும், பிளேட்டோவும் முத்தெடுத்த
அரசியலை தத்தெடுத்த வீணரிவர் வீணாக்கினரே!
செம்மறிக்கூட்டமொன்றுமிப் போலிகளை நம்பி
செம்மையறியாது பின் செல்கின்றனவே!

அன்பிலும் போலி - இவர் பண்பிலும் போலி
யாதொன்றும் உண்மையாய்ச் செய்யாரே!
இவர் பேச்சுமோர்பொருட்டென சில மூடரும்
கைதட்டி மெய்சிலிர்த்து மகிழ்ந்தனரே!

Tuesday, October 14, 2008

இவனும் அரசியல்வாதி!

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

முதலிரண்டு பொத்தான்கள் திறந்த ஷேர்ட்...
நன்றாக அழுத்திய காற்சட்டைகள்...
புத்தம் புதுசாய் ஜொலிக்கும் சப்பாத்துகள்...
14 பவுணில் கழுத்தில் ஒரு சங்கிலி...
அது தெரிவதற்குத் தானோவந்த பொத்தான் திறப்பு?!

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

தனியே வந்தால் பந்தா இல்லையென்று....
கூட்டத்துடனேயே வருவானிவன்...
காந்தியுந்தான் வந்தார் கூட்டத்துடன்...
ஆனால் இவனுடன் வருவது
ரெளடிகளும், சண்டியர்களும்....

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

சின்னச் சின்ன விடயங்களிற்குக் கூட
ஆண்மை பொங்கும் இவனுக்கு!
ஏனோ தெரியவில்லை பிறரைப் பழிக்காவிடின்
உறக்கமேயில்லை இவனுக்கு!

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

வாயில் எச்சில் ஊறும் எமக்கு....
வாயில் துர்பேச்சு ஊறும் இவனுக்கு...
பதிலுக்கு பதில் பேசுவான் - எவரையும்
எதிர்க்கும் ஆண்மகனென தன் புகழ் பாடுவான்!

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

இவனும் சரியில்லை, இவன் மகனும் சரியில்லை...
மக்களிலும் பிழையில்லை - காரணம் அவர்கள்
இவனுக்கு வாக்களிக்கவேயில்லை....
அப்போ இவன் எப்படி அமைச்சரானான்???

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

மதுரைக்கு வந்த சோதனை!

ஆயிரம் இளசுகளின் காதல் தேசம் நீ!
கோடிகளால் நிறைந்த கேடியும் நீ!
டாலரெனும் ஆயுதம் கொண்டு - பிற
ஆயதமும் பல செய்து - இப்பாரதனை
ஆட்டிப்படைத்த வல்லரசனும் நீ!

அன்று செழித்து நின்ற மதுரைக்கொரு சோதனை...
இன்று பிறரைப் பழித்து நிற்கும் உனக்குமொரு சோதனை....

தன் கையே தன்னையடித்தது போல
உன் டாலரே உனக்கு வைத்தது ஆப்பு!

நீ குட்டக் குட்ட பிறர் குனிந்த காலம் போகப்போகுது....
பிறர் தட்டத் தட்ட நீ ஆடும் காலம் வரப்போகுது....

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவன் அடியிழந்த கதை
ஆடியாடிக் களைத்த இப்பார் அறியாததொன்றில்லையே!

Thursday, September 4, 2008

மீண்டும் தொடர்கிறேன்....

காலமும் ஓடிவிட்டது.. ஒருவாராய் ஏ.எல்லும்
முடிந்துவிட்டது.....
சமூகத்துக்குக் கவிபாட மீண்டுமோர் காலமும்
மலர்ந்துவிட்டது....

இன்னும் ஆழமாய்.. இன்னும் அகலமாய் கவிபாட
துணிந்துவிட்டேன்...
புதிய காளமேகத்திற்கு ஆதரவளித்துவரும் அனைவருக்கும்
நன்றிகூறி என் பணி தொடர்கிறேன்.....!

Thursday, July 17, 2008

ஏ.எல்லிற்காய் காத்துக்கிடக்கிறேன்....

கொஞ்சம் இடைவெளிதான் எடுத்துக்கொண்டேன்.... சமுகத்தின்
குறைகளைக் கடந்து கல்வியில் என் குறை குறைத்து
ஏ.ஏல்லில் மூன்றேஏ சித்திபெறவே இந்த இடைவெளி.....
பொதுநலத்தைக் கடந்த சுயநலந்தானே மனிதன்?(!)

ஆனால் பாருங்கோ, “சாக்”கு மூட்டையினாலும்... வேலையற்ற
தேர்தலினாலும் என்பாடு திண்டாட்டம்... அட நான்மட்டுமல்ல
ஏ.எல்லெழுதும் அத்தனைக் கண்மணிகளுக்கும் இது பொதுவே!
பாவம் பாதுகாப்பு விடயத்தில் அவைக்கும் திண்டாட்டம்.....

இலங்கையில கொண்டாட்டம் போய்த் திண்டாட்டம் வந்ததுவெ....
ஆண்டான் முதல் ஆளக்கொணந்தான் வரை திண்டாட்டம்....
வீட்டில கத்தீனம் - இது போதும் இப்போதைக்கு - கடவுள் கருணையால்
ஏ.எல். எண்டைக்காவது முடிஞ்சதும் மீண்டும் வசை பாடுறன்....

எங்கட டீ.வி. ஸ்ரைலில சொல்றதென்டால் “அதுவரைக்கும் புதிய காளமேகத்தில் ஒரு குட்டி பிறேக்...”
தெரியுந்தானே இவேன்ட குட்டி பிறேக்!!!(?)

Sunday, June 1, 2008

நைட் கிளப்ஸ்




இளமையின் இனிய இராப்பொழுதுகள் - இனிமையாய்
கழிவது இன்பமெனினும் - எங்கள் பண்பாட்டிற்குத் துன்பம்!
காதலனுடன் காதலி கூடினால் காதல் வாசம் - கண்டவனுடன்
கண்டவளும் ஆடினால் வீசுவது நாற்றம் !

முந்தை நாள் பிறந்தவன் - தன்னிலை அறியாதவன்
பித்துக் கொண்டு கற்றுக்கொண்ட பழக்கமெல்லாம்
நாகரீகத்தின் உச்சமென உச்சி மோர்ந்தால் - பாவம்
அழிவது நானுமல்ல என் பண்புமல்ல - நல்ல மனிதன்
உள்ளவரை பூமி பிழைக்கும் - பூமி பிழைக்கும் வரையில்
நல்லவன் வாழ்வான் - அழிவது நாமல்ல! அறியாதவனே
அழிந்திருப்பதேன்றால் சமஸ்கிருதத்துடனே அன்றேல்
இலத்தீனுடனே அழிந்திருக்கும்! - அழிவதற்கு நாங்கள்
அற்பர்கள் அல்ல! - சிந்தித்து பார் நீ யாரெனப் புரியும்.....
உன் வரலாறும் தெரியும்.....!

Thursday, May 15, 2008

குடைகளுக்குள்ளே...




குடைகளுக்குள்ளே குட்டிக் குட்டி ராஜ்ஜியங்கள்
நடத்துகிறார்கள் - நவீன யுகக் காதலர்கள்!
கடற்கரையின் கற்புளுதிகளுக்குள் கலாசாரத்தின்
உயர்ச்சிகள் உயிரற்ற ஜடமாய் புதைந்து போயினவே!


காலம் மாற கலாசாரமும் மாறவேண்டும் என
மாற்றம் பேசும் உள்ளங்களே... ஐநூராண்டு முன்
பிறந்த கத்துக்குட்டிகளின் மிருக கலாசாரத்துள்
ஆயிரமாண்டு பழமைபெற்ற எம் கலாசாரங்கள்
கலந்து கலவையாகி அழிந்து போவதோ?


தாரத்திற்காய் தாயை விற்கும் ஈனக்கூட்டம்
நாங்கள் என்றால் - அட போடா மடையா அது நாமல்லநீயே
தாயும் வேணும் தாரமும் வேணும் - ஆனால்
தாரத்திற்காய் தாயை தூக்கி எறியக்கூடாது....
தாரம் அழகு தான், ஆசையும் எமக்கு அவள்மேல்
கூடத்தான்.... ஆயினும் தாயின்றி நீயுமுண்டோ?

Tuesday, May 6, 2008

இலக்கியம் படைக்கும் மாமேதைகள்....


சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த இப்பாரதனில்
இன்று இலக்கியம் படைக்கும் மாமேதைகள்....
உண்மை மேதைகளுக்கு விலக்குண்டாயினும்
பொய்மைப் புகழ் விரும்பிகளும் இலக்கியவாதிகளாய்
இனங்காட்டும் ஈனம் அவர்க்கு மட்டுமல்ல தமிழுக்கும்
இழிவாமே ஏனறியார் இம்மூடர்....


இலக்கணமும் இறந்தாச்சு - சங்க
இலக்கியமும் மறந்தாச்சு - அற்பப்
புகழ் விரும்பும் பேய்களின் கையில்
தமிழ் மணமும் நாறிப்போயாச்சு....


அர்த்தமில்லா கதைகளெல்லாம்
காவியமென போற்றப்படுதலாச்சு
கேடுகெட்ட வசனமெல்லாம்
கவிதை என புகழும் பெற்றாச்சு....


கட்டுக்கட்டாய் புத்தகங்கள் - குறை விலையில்
அச்சுப் பதிச்சாச்சு... - வேலையற்ற மாக்களுடன் கூடி
வெளியீட்டு விழாவும் நடத்தியாச்சு....

சங்கமாவது கிங்கமாவது - யார் எமைக்கேட்பார் ?
காசிருந்தால் கண்டதும் எழுதும் 'பண்டிதரும்'
இனி இலக்கிய மேதை தான்!

Wednesday, April 16, 2008

அணுவினைத்துளைத்து.......


எமனுக்கு பயந்தோடி ஒளிந்த காலம்போய்
எமனுக்கு உருக்கொடுக்க ஊரெல்லாம் களேபரம்
அணுவினைத்துளைத்து ஆயிரமாண்டு மாயை போக்கியே
சாதனை செய்தவன் - அதனாலேயே அழிதல்
தன்னையழித்துத் தான் வாழும் விலைமாதரை ஒத்ததன்றோ?

Monday, April 14, 2008

காப்பீரே இப்புவியை!


அறிவிலோங்கி ஆணவம் மிகக்கொண்டு
அலைந்து திரியும் அறிவிலியே மனிதா....
அண்டம் முழுதும் ஆளும் ஆசையில் அண்டத்தை
ஆபத்தில் அண்டவைத்துவிட்டதுமேனோ?
பச்சை பச்சையாய் பசுமையாயிருந்த சுவர்க்க பூமியை
கரியமலமும் கடுஞ்சூடும் சூழ்ந்த சுடுகாடை ஆக்கியதேன்?
அன்புடன் கேட்கிறேன் - பண்புடைய மானிடா
உன் சந்ததியும் சாதிக்க வேண்டும் ஆகையில் இப்
பூமியும் வேண்டும், அதனால் காப்பீரே அதை
தணிப்பீரே பூமகளின் வெப்பத்தை - கொடூரத்தை !
மாறுபடுவீராயின் வீழ்வீர் பரம்பரையுடனே!

Sunday, March 23, 2008

உயிர் காப்போர்!

உயிர் தந்த இறைவனொப்ப உயிர் காக்கும்
கலைஞனாம் - அட இவனும் மனித வடிவிலுதித்த
கடவுளாம்! - அப்பாவியர் உம்மில் இறைவனை பார்ப்பினும்
அட பக்தனாய் பார்க்காவிடினும் ஒரு உயிரென ஆயினும்
ஈவிரக்கம் கொண்டு காப்பீரே - பிணமும் வாய்திறக்கும்
பணத்தை கறக்கவே பல பிணங்களை தந்ததுமேன்?
முழு முதல்வன் ஒப்ப திறன் படைத்த நீரே... மன்னுயிரை
காத்திடுவீரே - மாறியற்ப பணப்பித்துக்கொண்டு அலைவீராயின்
ஐய நீவிர் புலையனிலும் கடையனாவீர் - மனதிற் கொள்க!

Saturday, March 15, 2008

இரண்டு இஞ்சிக் காலன்!



இரண்டு இஞ்சிக் காலனடா - இது
இப்புவியோர் கண்டெடுத்த சாபமடா
தமக்குத்தாமே ஆப்பு வைக்க புலையோர்
தேடித்தந்த போக்கிஷமடா! - நீ குடித்து நீயே
மடிந்தால் அது விஷம்... நீயும் அழிந்து
பிறனும்துடித்தாள் அது கொடுமையடா!
விட்டு விடு இந்த புகைப்பழக்கத்தை இல்லை
செத்து மடி பிறரை சாகடிக்கும் முன்!

Wednesday, March 12, 2008

என்ன கொடுமை சார் இது?



மனிதருக்கும் விலங்குக்கும் வேறுபாடு ஓரறிவாம்
அந்த ஓரறிவு பகுத்தறியும் ஆறறிவாம் - நூறறிவு
வழங்கியும் என்பயன் இம்மூடர் - தம்மை தாமழிக்கும்
மதுவுக்கோர் முற்றுப்புள்ளி வைக்காக்கால்! - அட மதமெல்லாம்
ஒன்றிசைந்தே போதிக்கும் மது ஒழிப்பு - ஆயினும் இம்
மூடரெல்லாம் ஒருமித்தே விடம் பருகும் ஈனமேனோ?
நாமாருக்கும் குடியல்லோம் எனப்பறைபவர்களும் - மது
என்றால் மடைத்தனமாய் அலைவதேனோ? - வாழத்தந்த
வாழ்வை எல்லாம் மது பருகியே அழிப்பவர் ஈனரிலும் கடையரல்லோ?

Saturday, March 8, 2008

நெட் கபெ ஜாலங்கள்!

குட்டிக் குட்டிப் பெட்டிகளினுள் - பெரிய பெரிய விடயங்களடா
நெட் கபெயில் - அட மெத்தவே பயன்பட நல்லானொருவன்
விக்கி முக்கி கண்டறிந்த இணையத்தினுள் - ஆழ ஊடுருவி
தட்டித் தடுமாறி - அப்பப்பா எத்தனை பண்ணுகிறார்கள்?!
அளவோடிருந்தால் அமிர்தம், எல்லை மீறிவிட்டால் விஷம்...
இதைப்புரிந்தவன் புத்திசாலி, மற்றவன் மடையனிலும் கடையன்!

Wednesday, March 5, 2008

மொட்டுக்களைப் பறிக்காதீர்....



மொட்டுக்கள் பூக்க முன்பே, நசுக்கி நாசமாக்கும்
நரர்களும் இந் நரகத்தில் உண்டென்று கண்டேன்!
நாயினும் எளிய, பறையனிலும் இழிய சாதி உண்டெனில்
அட நாசம் புரியும் இந்த நரர்களே அதைச் சேர்வார்!

புதுமைப்பிறவிகள்!




சமாதானத்தின் பெயரில் சமாதானத்திற்காக ஒரு யுத்தம்
அடடடா! ஒரு கொலையைதடுக்க பல கொலைகள்!
என்னே இம்மானிடர் அறிவும் ஆற்றலும்? இவர் மனிதப்பிறவியோ?
இல்லை விலங்குக்கும் மாநிதருக்கும் பிறந்த புதுமைப்பிறவிகளோ?

Sunday, March 2, 2008

மலையகத்தின் உத்தமர்கள்!




மலையகம் - மாடாய் தேய்ந்த மனிதர்களின் பூமி
எமக்காக, நம் நாட்டின் செல்வத்துக்காக, தம்மையே
உரமாக்கும் உத்தமர்கள் வாழும் புனித பூமி
உத்தமர்களிடயேயும் சூத்திரர்கள் பிறப்பதுண்டு!
ஆனால் பாவம் அந்த சூத்திரர்களே தலைவரானால்
உத்தமர்கள் பாடு திண்டாட்டம்தான் - தலைவர்கள் பாடு
கொண்டாட்டம் தான்! - உத்தமர் குருதியில் குளிர் காயும்
நன்றி மறந்த பன்றிகளே! - அரசியலெனும் பெயரில்
கொள்ளையடிக்கும் கபோதிகளே! - உமக்கெல்லாம் காலம்
கட்டியடித்துப் பதில் கொடுக்கும்!

Saturday, March 1, 2008

துச்சாதனர்களும் துரௌபதிகளும்!

துயிலுரிந்த துச்சாதனனை தூக்கிலிட வேண்டுமென
தூற்றித்தள்ளிய தூயமகளிர் - இன்று தியேட்டர்களில்
துயிலுரிந்தாடும் துன்பத்தை மட்டும் தூக்கி எரிந்ததேன்?
ஆண் உரிந்தால் உரிமை மீறல் - நாமே உரிந்தால்
உரிமை மீட்டல் என்பதாலா? - அட மூடப்பெண்ணே
யாருரிந்தாலும் அவமானம் உனக்கன்றோ!

Thursday, February 28, 2008

கண்ணீரில் கரைகின்றேன்!



தமிழ்க் கதைகளை தமிழன் ஆர்வமுடன் படிக்க
நல்ல கதை தந்தவர் - விகடனில் நீவிர் எழுதிய
தொடரைப் படிக்கத் தவறியதுமில்லை - 21ம்
நூற்றாண்டு கண்ட அற்புத இலக்கியவாதிகளுளொருவரே!
தமிழிலும் அறிவியல் கண்டவரே சுஜாதா....!
உம்மையும் பறித்த காலனுக்குமோர் மனமுண்டோ!
உமது பிரிவினால் துயருறும் தமிழ் நெஞ்சங்களுடன் கூடி
நானுங் கண்ணீரில் கரைகின்றேன்!

Tuesday, February 26, 2008

இலவச தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுந்தகவல்

Call or Send SMS to any phone anywhere in the world Free! - CLICK HERE & GET THE CHANCE

இந்த இலவசச் சேவையைப் பெற இங்கே அழுத்தவும்.

Wednesday, February 20, 2008

காலையுந்தான் போர்க்களமானதே!

விடிகாலை நான்கு மணி,அட நாய்கள் கூட விழிக்கவில்லை
வில்லங்கமாய் மனிதன் மட்டும் விழித்துவிட்டான்.
தாயார் தம்பிள்ளைகளை வசைபாடித் துயிலெழுப்ப - இது
தாங்காத தந்தைகள் தூக்கந்தொலைக்க - காபியென்ற
பெயரில் வெந்நீர் உதடுசேர - கடன்களை நாம் கழிக்க
உப்பிலா உணவும் வாய்க்கு ருசியாய் உள்ளே போக
ஸ்கூல் வண்டிக்காரனும் ஹார்னை அழுத்த - ஐயொவென
ஓடிப்போய் அதைப்பிடித்து பிள்ளை பள்ளி செல்ல
கணவரும், மனைவியுமாய் ஒற்றைக்காலே ஒருதரத்தில்
நிலம்பட ஓடியோடியே அலுவலகஞ்செல்ல
அப்பப்பா - காலையுந்தான் போர்க்களமானதே!

Sunday, February 17, 2008

இசையின் பெயரால்...

பொப் இசை, ராக் இசை, ராப் இசை, ரெக்கே இசை - என
இசையின் பெயரால் வசை பாடும் நசைகளே!
இசையின் தசையாம் ஸ்ருதியும் லயமும் மறந்தோ
உங்களுக்கு - அட மூடா, இசையும் உனக்கொரு கேடோ?

இதுவும் புரிபவருக்கு புரியும்....

அண்ட் கம்பெனிகளின் கூடாரமிது - அன்பு
அழிந்த பாலையுமிது - வம்பு புரிபவர் அன்பர்
என ஆதரிக்கப்படும் 'நல்ல' தேசமும் இது!
ஐயோ இவரைபோல் இவர் தேசமும் போனதோ பாழாய்!

Wednesday, February 13, 2008

இனியாயினும் விழித்திடுங்கள்!

இன்பம் தேடி அலையும் வாழ்வு அன்றும் இன்றும் - ஆனால்
இன்பத்தை இன்பமாக அனுபவித்த காலம்போய்
ஒரு நாள் இன்பம் காண ஒரு ஆயுளையே பணயம்வைத்து
வீரவிளையாட்டில் வீணடிக்கும் வீணர்களே - இனியாயினும்
விழித்திடுங்கள்!

Monday, February 11, 2008

டியூஷன் மாஸ்டர்மாரே கேளுங்கள்...

எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்ற காலம் போய்
எழுத்தறிவிப்பவர்கள் பலருக்கு எமனாகும் காலமிதுவோ?
டியுடரி கிளாஸ் ஒரு பீஸ் பர்சனல் கிளாஸ் ஒரு பீஸ்
எனகல்விக்கு விலை பேசும் கனவான்களே - நீரும் வாழ்வீர்!

Sunday, February 10, 2008

இன்றைய மாணவர்களின் நிலை கண்டு.....

இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை
அதுபோல இன்றைய மாணவனும் அங்குமிங்குமாய்
அலைந்து உழன்று டியூஷன் போய் படிக்கிறான்
பாவம் அப்பன் - அவன் காசன்றோ கரைகிறது
இன்றைய மாணவன் மாட்டினும் கடையன்
அதுவாயினும் உண்டபின் அசை போடும்
எம் மாணவன் நுனிப்புல் மேய்ந்த மட்டுந்தான்!

Saturday, February 9, 2008

மனிதநேயம்

ஆசம் பாசம் இதெல்லாம் மோசம் என்பான்
நேசம் என்ற பண்பில்லாப் புலையன்
மனித வாசமே ஈதென்றறியா அம்மூடனை
மோசம் போகச்சொல்வதில் குற்றமேதுமில்லையே!

கற்பு

உட்பாவாடைகளே முழு ஆடையாக மாறிவிட்ட யுகந்தனிலே
கற்பிற்கும் ஆப்பு வைக்க புறப்பட்டு விட்டார்கள் நம்மிள
மங்கைகள் - பாவம், இது அவர்தவறில்லை - என்னிடம்
ஒன்றிருந்தால் தானே அதன் அவசியம் என்க்குப் புரியும்!

அழகிய தமிழ் மகன் பார்த்தேன்!

சைவக்கடையில் சாம்பார் செய்வதே ஒரு கலை!
பழைய மரக்கறிகள், கறிகள் யாவுக்கும் புத்துயிர்புகுத்தும்
பிரம்மாக்களின் கலையது! - ஆனால்உணவு பழசானாலும் - சமைத்தவிதம்
அதை புதுப்பிக்கும்!இதுவன்ன சாம்பார்தான் அழகிய தமிழ் மகன்
ஆனால்பாவம் அதைச்சுவைத்த பின் அழுகிறான் தமிழ் மகன்!

பிச்சையெடுக்காதீர்

யாசகமென்பது பெரும் இழிவு காலம்போய்
அதுவே நல்ல தொழில் என்ற காலம் பிறந்ததுபோல
வீதியோரமெல்லாம் கர்ணபிரபுக்களைத்தேடி யாசகர்கள்!
நோகாமல் நுங்கு பருகும் இதுவும் ஒரு தொழிலாம்!
முடியாதவன் யாசித்தால் அதுவவன் இயலாமை
முடிந்தவன் யாசித்தால் அதுவவன் சோம்பேறித்தனம்।
உடல்வலிமையிருந்துமுழைக்காத சோம்பேறிகளே
உங்களைவிட உடல் விற்றுப் பிழைப்போர் மேலடா!

Friday, February 8, 2008

அரசியல் வியா(வா)திகள்!

செய்வதோ வெட்டுக் குத்து, இல்லை காட்டுக் கத்து
இதுதான் இவர்களின் பித்து,சொல்வார்கள் பத்து
இவரிடம் சேர்கிறது சொத்து, இன்னும் எங்கள் வாழ்க்கையோ புத்து
அரசியல் என்ற முத்து, உங்களால் அழிந்ததன் சத்து!

செல்போன் சாதனையாளர்கள்

நோகியாவோடு பிறந்து,மோடரோலாவுடன் வளர்ந்து
சோனி எரிக்சனுடன் வாழ்ந்து, எல்।ஜியுடன் மடியும் வாழ்வடா!
சங்கத் தமிழர் படைத்த சாதனையெல்லாம் - இவர்கள்
மொபைல் பேசிப் பேசியே சாதிப்பார்களோ?

இது புரிபவருக்குப் புரியும்!

வீரமும் தீரமும் படைத்த குலமாம் - அவை
அரிக்கும் மானிடனுக்கும் பிறந்த பிறப்பாம்!
இருக்கட்டும் பரவாயில்லை - ஏனெனில்
குலப்பிறப்பில் துளியும் ஐயமி்ல்லை!
காலிலே முள் குத்திவிட்டதென தலைக்கு கவசம்
போடுமிவரை மூடரென நான் கூறவும் வேண்டுமோ?

தலைவர்களின் பாதுகாப்பைப் பார்த்தேன்

ஒருவன் போக - ஓராயிரம் பேர் புடைசூழ ஊர்வலமாம்
ஒரு குதிரைக்குப் பாதுகாப்பாய் பத்தாயிரம் கழுதைகளாம்!
பார் காக்கும் மன்னவனே பயந்து நடுங்கி ஒடுங்கிக் கிடந்தால்...
அவன் காக்கும் பாரோரை யார் காப்பான் - அட கடவு(ளா?)ளே

Thursday, February 7, 2008

பாதையோரத்தை அசிங்கப்படுத்தாதீர்கள்

நாய்க்கு இங்கைந்தறிவாம், அதுவோர் ஈனப்பிறவியென்பார்
பாதையோரத்தே மூத்திரமடிக்கும்போது - சாத்திரத்தையும்
கோத்திரத்தையும் மறப்பதேனோ? - நாமும் அதுவுஞ்செய்வது
ஒன்றானால்,நமக்கிடையே வேறுபாடென்றுமொன்றுண்டோ?
அதுவடித்தால் சாபமடா, நீயடித்தால் விமோசனமோ?
இங்கு மூத்திரமும் பிழையில்லை - சாத்திரமும் பிழையில்லை
உன் வாழ்வெனும் கதையி்ல் உன் பாத்திரமே பிழை!

பழனி படம் பார்த்த பின்னர்

ஞானப்பழம் வேண்டி மலையேறினான் அந்தப் பழனியாண்டி - அட
இந்த ஞானசூனியங்களோ சினிமாவெனும் விளக்கை கமர்ஷியலெனும்
துணியாலணைக்கின்றன - பஞ்சாமிர்தமென சாக்கடைச்சேற்றுக்கு மைவண்ணம்
அப்பி - மூடருக்குப் பிரசாதமெனத் தருகிறான் (மா“மா)மன்னன்”!

காளை படம் பார்த்த பின்னர்

தன்னை லிட்டில் லிட்டிலென்பான் - அவனறிவும் லிட்டில்தானோ?
கட்டிலும் காமமுமில்லாப்படமவன் சரிதையிலுண்டெனக்
காட்டவோர் படமெடுக்கவே - காட்டினான் ஒரு எருமையின் “கதை”
ஐயோ! அக்கதையில் உண்டோ ஏதும் கதை?

இலங்கையின் இன்றைய நிலை

பள்ளிகளிலே குண்டுபோட்டுவிடுவானென்று பயந்துநடுங்கியே
இங்கு சில மூடரும் பள்ளிகளை மூடிவிட்டனர்!(?)
சளி பிடித்ததால் மூக்கையே வெட்டிவிடும் மூடரும்
இப்புவியிலுள்ளனரென்பது உண்மையன்றோ?...(நானறியேன்)

Wednesday, February 6, 2008

நடிகர்களும் தமிழினமும்

சூப்பரென்பார், சுப்ரீமென்பார், அல்டிமேடென்பார்
இளையதென்பார், புரட்சியென்பார், லிட்டிலுமென்பார்
இவர்தான் எந்தெய்வமுமென்பார் - கூத்தாடுவதும்
குண்டிநெழிப்பதும் ஆத்தாதான் செயலென்று அறியாமூடர்!

தொலைக்காட்சியும் எம் சமூகமும்

சன், விஜய், கலைஞர், மக்கள் என ஸ்தோத்திமோதுவர்
இவையெல்லாந் தெய்வமென்பர் - தருமருள்
நெடுந்தொடரென்பார், அதனாற்றமக்கு முத்தி என்பர்
வேறுசோலியற்றுக் கிடக்கும் நரகத்தின் அம்சமன்னார்!

நடிகைகளும் எம் சமூகமும்

அந்நிய அழகிகளால் தலைவணங்கிச் சீரழியும் புலையரே!
அவர்க்கு கோயிலுங்கட்டி, தோத்திரமுங்கூறும் ஈனரே!
தன்னுடல்விற்று வயிறு பிழைக்கும்
பரத்தையருமுமக்குத் தெய்வங்களோ?

ஆங்கில மோகம்

அம்மாவை மம்மியென்றும் அப்பாவை
டாடியென்றும் கூறிக் கெடுத்த என்சமூகம்
சும்மாவோர் ஓரத்திற் சுருண்டு கிடந்த
நாயைப் பப்பி, பப்பி என்றதாம்!

இன்றைய இளையோர் நிலை

காதலுஞ் செய்து,கிரிக்கட் மோகமும் கொண்டு
கல்வியைக் கோட்டைவிடும் கோணங்கிகளே!
சினிமாவுக்கு காதல் பணம்!, வீரனுக்கு கிரிக்கட் பணம்!
அட மூடா படித்தால் தான் உனக்குப் பணம்!

தமிழின் சாபக்கேடு

தமிழைத் தமிலென்றும் டமிலென்றும்
உளறித் தள்ளும் உதவாக்கரையே!
உன் தாயையுங் கூட நாளை
அம்மாவிற்குப் பதில் சும்மா என்பாயோ?
Creative Commons License
Tamil Poems by Puthiya Kalamegam is licensed under a Creative Commons Attribution-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at www.puthiya-kalamegam.blogspot.com.

உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்

இவ்வலைக்குடில் தொடர்பான தங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாது எனக்கு அனுப்பி வையுங்கள். இது இவ்வலைக்குடிலை மேலும் மெருகேற்ற பேருதவியாக அமையும்.

தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.

nkashokbharan@lankamail.com

அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்